குட் நியூஸ்..! அடுத்த 2 ஆண்டில் 2.50 லட்சம் வீடுகள் பழுதுபார்க்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கிராமப்புற விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை ஏற்று 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அடுத்த 2 ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், புனரமைக்கவும் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின், நடப்பாண்டில் 234 தொகுதிகளிளில் 797 பணிகள் 11 ஆயிரத்து 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 63 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.