குட் நியூஸ்..! விரைவில் எய்ம்ஸ்க்கு இணையாக கிண்டியில் ரூ.240 கோடியில் மருத்துவமனை : அமைச்சர் எ.வ.வேலு..!

கோவையில் கலைஞர் நூலகம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கலைஞர் நூலகம் எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ரேஸ்கோர்ஸ் பகுதி மற்றும் சிறைச்சாலை பகுதியில் நூலகத்தை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் கருத்துக்களை முன் வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, ”முதலமைச்சரிடம் மதுரையை போல கலைஞர் நூலகம் கோவையில் வேண்டுமென மக்கள் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் கலைஞர் நூலகம், அறிவியல் மையம் ஆகியவை கோவைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நூலகத்தை எந்த இடத்தில் அமைப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தியுள்ளேன். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 6 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், சிறைச்சாலை பகுதியில் 7 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரு வரைபடத்தையும் முதலமைச்சரிடம் காட்டி அவர் தேர்வு செய்யும் இடத்தை எடுப்போம்” என்றார்.

மேலும், ”பொதுப்பணித்துறை மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக, 2026 ஜனவரியில் கட்டாயமாக நூலகத்தை திறப்பேன் என முதல்வர் தெரிவித்திருந்தார். நூலகம் மட்டுமல்ல, அறிவியல் தொடர்பானவையும் இடம்பெற வேண்டும் என்று சொல்லி உள்ளார். இடம் தேர்வு செய்யப்படுவதற்காக வந்துள்ளேன். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். கோவையில் எல்&டி ஒப்பந்தம் இன்னும் முடியாததால் அதை நான்கு வழிச்சாலையாக முடியவில்லை. எல்&டி நிர்வாகத்திடம் இது குறித்து பேசி வருகிறோம். அவர்கள் முடியாது என சொல்லி இருப்பதால் தொடர்ந்து பேசி வருகிறோம். உக்கடம் மேம்பாலம் ஒப்பந்ததாரர் மார்ச் 30ம் தேதிக்குள் பணிகளை முடித்து விடுவதாக சொல்லி இருக்கிறார். அதிகாரிகளும் முடித்து விடலாம் என்று சொல்லி இருக்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”சாலை விரிவாக்க பணிகளின் போது மரத்தை வெட்டுவது தவிர்க்க முடியாது. இந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் மரங்கள் பொதுப்பணித் துறையின் சார்பில் நடப்பட்டுள்ளது. 2024 டிசம்பருக்குள் அவிநாசி சாலையில் பாலம் வேலை முடித்து தரச் சொல்லி இருக்கிறோம். எய்ம்ஸ்சுக்கு இணையாக கிண்டியில் ரூ.240 கோடியில் மருத்துவமனை கட்டி இருக்கின்றோம். எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத விஷயங்கள் கிண்டி மருத்துவமனையில் இருக்கின்றது. அறிவித்து 13 மாத காலத்தில் தேர்ந்தெடுக்கிறோம். பெரும் பலம் கொண்ட ஒன்றிய அரசு அதை கட்டியிருக்க முடியாதா? இப்போது அரசியலுக்காக அதை செய்கின்றனர். அது கானல் நீராகவே இருந்து கொண்டிருக்கின்றது” என்று தெரிவித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *