குட் நியூஸ்..! விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம்..!

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.30ம் தேதி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் மற்றும் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பு சேவை வழங்குவதற்காக சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் மூலம் 498 வழக்கமான பேருந்துகள் தவிர நெரிசல் மிகுந்த நேரங்களில் 200 சிறப்புப் பேருந்துகளும் மற்றும் 4,651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய கட்டிடத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து முனையத்திற்கும் இடையே 4 மினி பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வண்டலூர் கேட் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் (KCBT) இடையே 2 மினி பேருந்துகள் கட்டண இணைப்பு சேவை பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் கோயம்பேடு பேருந்து முனையத்திற்கும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதை தவிர கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கும் 2 நிமிடத்திற்கு ஒருமுறையும், இதில் 6 பேருந்துகள் பாயிண்ட்- டூ -பாயிண்ட் பேருந்துகளாகவும், அதே போல கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும், கிண்டி பேருந்து நிலையத்திற்கும் இடையே 3 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இம்முனையத்திலிருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர், மாதவரம், அம்பத்தூர், திரு.வி.க. நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இம்முனையத்தில் பிரிப்பேட் ஆட்டோ சேவைகள் கடந்த 30ம் தேதி வரை 642 முன்பதிவுகளும், வாடகை கார்கள் 510 முன்பதிவுகளும், ஓலா, ஊபர் மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட ஆட்டோக்களுக்கு பிரத்யேக நிறுத்துமிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரத்துடன் கூடிய காத்திருப்பு கூடங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் (CMRL) மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளம்பாக்கத்தில் ஒரு புதிய மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. மேலும் இப்பேருந்து முனைய சென்னை மாநகர் போக்குவரத்து பேருந்து நுழைவாயிலில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் முகப்பு வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.

மேலும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்பேருந்து முனையத்தில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மலிவு விலை உணவகங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். ஏடிஎம் மையங்களும் திறக்கப்படும். குறிப்பாக, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய இப்பேருந்து முனையம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளது.” என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *