பயணிகளுக்கு குட் நியூஸ்..! வாட்ஸ் ஆப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம்..!
பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் விதமாக சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் ஆப் மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மெட்ரோ ரயில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு ஜி.பே, பேடிஎம் ஆன்லைன் மூலமாக டிக்கெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் அப் மூலமாக பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்அப் மூலமாக பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இங்கும் பொதுமக்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மேலும், “நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் பேப்பர் பயணச்சீட்டு அளித்து வரப்படுகிறது. அதைக் குறைக்கும் விதமாக வாட்ஸ் அப் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்” என்றார்.