மதுரை மக்களுக்கு குட் நியூஸ்..!! ஐபிஎல் தொடரை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கண்டு ரசிக்கலாம்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஐபிஎல் 2024 போட்டிகள் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. நேற்று டிக்கெட் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மெகா திரையில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் போர்டு ‘ஐபிஎல் ரசிகர் பூங்கா’ என்ற பெயரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதில் ஒரு நகரமாக மதுரை தேர்வு செய்யப்பட இருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்துதலின்பேரில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராட்சத திரையில் ஐபிஎல் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.