விப்ரோ ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. 6 மாதத்திற்கு பின் சம்பளத்தில் திடீர் உயர்வு.. செம ஹேப்பி..!

இந்திய ஐடி துறையில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, கடந்த இரண்டு காண்டுகளில் தனது ஊழியர்களுக்கு சராசரியாக 80% வேரியபிள் பே தொகையை மட்டுமே வழங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம், வர்த்தக மந்த நிலையில், செலவினம் குறைப்பு என பல செய்திகளுக்கு மத்தியில் அச்சத்தில் பணியாற்றி வந்த நிலையில், தங்கள் ஊழியர்களுக்கு சராசரியாக 85% க்கும் அதிகமான வேரியபிள் பே தொகையை வழங்கியுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில், விப்ரோ நிறுவனம் முறையே 80% மற்றும் 81% சராசரி வேரியபிள் பே தொகையை வழங்கியது. ஆனால், விப்ரோ நிறுவனத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கீட்டை கொடுப்பது மட்டும் அல்லாமல் 80,000 ஊழியர்களைக் கொண்ட விப்ரோ ஃபுல்ஸ்ட்ரைடு கிளவுட் வணிக பிரிவு ஊழியர்களுக்கு செப்டம்பர் காலாண்டில் 100 சதவீதமும், டிசம்பர் காலாண்டில் 89.74 சதவீதமும் வேரியபிள் பே கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சமீபத்திய ஈமெயிலில், வேரியபிள் மூன்று காரணிகளுடன் இணைக்கப்பட்டுக் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் வருவாய் (40%), மொத்த லாபம் (30%) மற்றும் மொத்த ஒப்பந்த மதிப்பு (30%) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு அணி வாரியாக வழங்கப்படும்.
விப்ரோ நிறுவனம் தனது லாப அளவீட்டை அதிகரிக்க, நிறுவனம் இரண்டாவது காலாண்டிலிருந்து மூன்றாம் காலாண்டுக்கு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஒத்திவைத்தது. இந்த தாமத்திற்கு பின்பும், ஊழியர்களுக்கு 6-8% சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
விப்ரோ நிர்வாகம் தனது மார்ஜின் அளவுகளை மேம்படுத்த முயற்சியில் செலவுகளைக் குறைக்க ஆன்சைட்டில் அதாவது வெளிநாட்டில் பணியாற்றும் மிட்-லெவல் பதவிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
விப்ரோ பணிநீக்கம் செய்யும் மிட்-லெவல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் CAPCO நிறுவனத்திலிருந்து தான். விப்ரோ 2021 ஆம் ஆண்டுக் கன்சல்டிங் நிறுவனமான CAPCO-வை சுமார் 1.45 பில்லியன் டாலருக்கு வாங்கியது, இது விப்ரோ தியரி டெலாபோர்டே தலைமையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவாகும்.
இதன் பின்பு விப்ரோ, காப்பீட்டுத் துறை டெக் சேவை பிரிவில் குறிப்பாகச் சொத்து மற்றும் விபத்து (பி&சி) இன்சூரன்ஸ் துறையில் அதன் போட்டித்தன்மையை வலுப்படுத்த, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இன்சூர்டெக் துறை நிறுவனமான ஆக்னே குளோபல் (Aggne Global) நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை 66 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.