பெண்களுக்கு குட் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் பிரச்சனையா ? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மகளிர் உதவி எண் 155370 என்பது 24/7 பெண்களால் இயக்கப்படும் சேவை ஆகும்.
இந்த உதவி எண் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற “பிங்க் ஸ்குவாட்” எனும் பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆடவர் மற்றும் மகளிருக்கென தனியாக, சுத்தமான பொது கழிப்பிடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள், தெளிவான மற்றும் அறியும்படியான அடையாளங்களுடன் அனைத்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களுக்கென, டயபர் மாற்றுவதற்கான வசதியுடன் பாலூட்டும் அறைகள் என அனைத்து ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ரயிலும் மகளிருக்காக என்று ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர் ஆகியோருக்கென 8 இருக்கைகள் ரயிலில் அடையாள குறியீடுகளுடன் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ரயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டியில், சக்கர நாற்காலிகளுக்கு என்று தனியாக ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.