குட் நியூஸ்..! இனி இந்த பகுதிகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து..!
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம் என்ற மகத்தான திட்டமும் ஒன்று. சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 சதவீதத்திலிருந்து 65 சதவிதமாக உயர்ந்துள்ளது.
தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும், திருநங்கைகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது, மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என நேற்று நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.