டிசிஎஸ் கொடுத்த குட்நியூஸ்! வேரியபிள் பே -செம அப்டேட்.. பாவம் விப்ரோ, இன்போசிஸ் ஊழியர்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த 3வது காலாண்டு முடிவுகளை ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.
இந்த 3 மாத காலகட்டத்தில் 2 சதவீத உயர்வில் 11,058 கோடி ரூபாயை லாபமாகவும், 4 சதவீதம் அதிகரித்து 60,583 கோடி ரூபாயை வருவாயாகவும் பெற்றுள்ளது. டிசம்பர் மாத மந்தமான லாப அளவீட்டின் மூலம் முதலீட்டாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காக டிசிஎஸ் நிர்வாகம் ஒரு பங்குக்கு ரூ.18 சிறப்பு ஈவுத்தொகையும், 9 ரூபாயை இடைக்கால ஈவுத்தொகை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தாலும், டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது செலவுகளைக் குறைத்து லாபத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக ஐடி ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தும், வேரியபிள் பே தொகையைக் குறைத்தும் வருகிறது. ஆனால் டிசிஎஸ் வித்தியமாகச் செயல்படுகிறது. டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் இக்காலாண்டுக்கு சுமார் 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டிலும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் துவக்க நிலை ஊழியர்கள் முதல் நடுத்தரப் பதவிகளில் இருக்கும் ஊழியர்கள் வரையில் டிசம்பர் காலாண்டுக்கு 100 சதவீதம் வேரியபிள் பே தொகையை அதிகளவில் பெறுவார்கள். மீதமுள்ள 30 சதவீத ஊழியர்கள் அவர்களுடைய செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே தொகையைப் பெறுவார்கள். நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ஜூன் காலாண்டு, செப்டம்பர் காலாண்டு, டிசம்பர் காலாண்டு ஆகிய 3 காலாண்டுக்கும் 100 சதவீதம் வேரியபிள் பே தொகையைக் கொடுத்துள்ளது. ஆனால் டிசிஎஸ்-ன் சக போட்டி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை 2வது காலாண்டில் 80 சதவீத வேரியபிள் பே தொகையை மட்டுமே கொடுத்துள்ளது. டிசம்பர் 31 நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கை 603,305 ஆக உள்ளது என இக்காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 608,985 ஆக இருந்த வேளையில் தற்போது வெறும் 3 மாதத்தில் 5680 ஊழியர்கள் குறைந்துள்ளனர். செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டிலும், டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 6,333 ஊழியர்கள் குறைந்த நிலையில் இப்போது வெறும் 3 மாதத்தில் 5680 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.