சிங்கப்பூர் கொடுத்த குட்நியூஸ்.. பணமூட்டை உடன் பெரிய படையே வருகிறது..!!
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என முக்கிய இலக்கை அடையத் தமிழக அரசு பயணத்தில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டம் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசு பல துறையில் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு இருக்கும் வேளையில் இந்த 2 நாள் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்திய நிலையில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் உயர் கமிஷ்னரின் டிவிட்டர் கணக்கில் இன்று மாலை முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இந்தச் செய்தியால் தமிழ்நாடு அரசு மட்டும் அல்லாமல் வர்த்தகத் துறையினரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
அப்படியென்ன செய்தி..?சிங்கப்பூர் இன் இந்தியா என்ற டிவிட்டர் கணக்கில் தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கிளம்பிவிட்டோம். இந்த முதலீட்டுக் கூட்டத்தின் முதல் கூட்டணி நாடாகச் சிங்கப்பூர் இருக்கும் வேளையில், இக்கூட்டத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் உயர் கமிஷ்னர் ஹெச்சி வாங்.
மேலும் இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் ஜனவரி 7 ஆம் தேதி சென்னை டிரேட் சென்டரில் மதியம் 3.15 மணிக்கு நடக்க உள்ள சிங்கப்பூர் கூட்டத்தில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிங்கப்பூர் கூட்டம் அறை B/C ஆகியவற்றில் நடைபெற உள்ளதாகவும் ஹெச்சி வாங் கூறியுள்ளார்.இதேவேளையில் இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் உயர் கமிஷ்னர் சுமார் 80 வர்த்தகத் தலைவர்கள் உடன் குஜராத்தில் நடக்கும் வைப்ரென்ட் குஜராத் கூட்டத்திற்குச் சென்று முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பேச உள்ளோம், சிங்கப்பூர் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி நடக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக் கூட்டத்தில் 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறிய அவர் குஜராத் கூட்டத்தில் செய்யப்படும் முதலீடு குறித்துப் பேசவில்லை. தமிழ்நாட்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 மற்றும் 2019 இல் நடத்தியிருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த முதலீட்டாளர் கூட்டத்தில் சுமார் 9 கூட்டணி நாடுகளும் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் நாடாகச் சிங்கப்பூர் உடன் நீண்ட கால நட்புறவு உள்ளது, இந்தப் புதிய முதலீடுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத் தொடர்பு கூடுதல் வலிமை பெற உள்ளது.