குட் நியூஸ்..! நாட்டில் 139 இன்ஜின்களில் கவாச் பயன்பாடு..!
தற்போது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நடந்து வருகிறது. இதில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே துறையின் கவாச் பாதுகாப்பு கருவிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையின் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ரயில் விபத்துகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தானியங்கி பாதுகாப்பு கவசமான கவாச் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் தெற்கு மத்திய ரயில்வேயில் 1465 வழித்தடங்களில் 139 இன்ஜின்களுக்கு கவாச் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை – டெல்லி மற்றும் டெல்லி – ஹவுரா வழித்தடங்களுக்கு கவாச் கருவிகளை பொருத்துவதற்காக டென்டர்கள் விடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரயில்வே துறை 340 கிலோமீட்டர் ஆப்டிகல் பைபர் கேபிள்கள், 269 தொலைதொடர்பு கோபுரங்கள், 186 நிலை உபகரணங்களையும் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருவிகள் பொருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடப்பு நிதியாண்டில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.