குட் நியூஸ்..! இனி ரத்து செய்த ரயில் டிக்கெட்டின் பணத்தை 1 மணி நேரத்தில் பெற முடியும்..!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் ரயில்வே துறையானது பயணிகளின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஐ ஆர் சி டி சி இணையதளம் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளும் முறை பழக்கத்தில் இருந்து வருகிறது. மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் டிக்கெட் புக் செய்யும் போது, டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.
இந்த சமயங்களில் அந்த பணத்தை திரும்ப பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, புக் செய்த டிக்கெட்டை ரத்து செய்தாலும், அந்த பணத்தை பெற பல நாட்கள் ஆகும். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு தற்போது தீர்வு ஒன்று கிடைத்துள்ளது. இனி பயணிகள் ஒரு மணி நேரத்தில் தங்கள் டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப பெற முடியும்.
IRCTC மற்றும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) இணைந்து இந்த முக்கிய மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதன் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாத பட்சத்தில் பயணிகளின் பணம் ரயில்வேயால் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் அடுத்த 1 மணி நேரத்திற்குள் திருப்பி அளிக்கப்படும். அதே போல, பயணிகள் புக் செய்து இருந்த டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், அவர்களுக்கும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
IRCTC மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, பயணிகள் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். கேன்சல் செய்த டிக்கெட்டிற்கான பணத்தை 1 மணி நேரத்திற்குள் பயணிகள் பெற முடியும் என்றாலும் சேவை கட்டணத்தை பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது IRCTC உங்களிடம் வசூலிக்கும் சேவை கட்டணத்தை உங்களால் திரும்பப் பெற முடியாது.