அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..! ஒரு மாதத்திற்குள் 5,100 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும்..!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB-Medical Services Recruitment Board) மூலமாக 1,021 மருத்துவர் பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த 1,021 மருத்துவர்களும் 15 நாட்கள் கால அவகாசத்திற்குள் பணியில் சேரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், 90 சதவிகிதத்திற்கும் மேலான மருத்துவர்கள் தற்போது பணியிடங்களுக்குச் சென்று பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போன்று, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி, 977 செவிலியர்களுக்கான (Nurse) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, 15 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இவர்களில், இதுவரை ஏறத்தாழ 50 சதவிகித செவிலியர்கள் பணியில் சேர்ந்து பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே முதல்முறையாக, பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் கீழ் 332 ஆய்வக நுட்புநர்களுக்கு (நிலை-3) காலி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (பிப்.21) நடத்தப்பட்டது. இதில், அவர்கள் விரும்புகிற இடங்களுக்குத் தேர்வு செய்து பணிநியமன ஆணைகள் பெற்றிருக்கின்றனர். கடந்த 20 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மேலும், 2 ஆயிரத்து 250 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 986 மருந்தாளுநர்கள் (Pharmacist), 1,066 சுகாதார ஆய்வாளர்கள் (Health inspectors) மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 என மொத்தம் 5 ஆயிரத்து 100 பேரைத் தேர்வு செய்வதற்குரிய பணிகளை மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், எதிர்வரும் ஒரு மாதக் காலத்திற்குள் மருத்துவத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 100 பணியிடங்கள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *