குட் நியூஸ்..! விரைவில் பெட்ரோல் டீசல் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை குறைகிறது ..!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றுள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது.
பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 16 ரூபாயும் என்ற அளவில் அந்த வரி குறைப்பு இருந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இருந்து தப்பின. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தவில்லை. கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-2024-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்து இருக்கிறது. இதுபற்றி தகவல்களை அடுத்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன.
கடந்த நிதியாண்டிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உபரி வருவாய் கிடைத்து இருக்கிறது. இதையடுத்து தங்களது லாபத்தில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு சுமையை குறைக்கும் வகையில் வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த மாத இறுதியில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும். இதுபற்றி விவரங்கள் இந்த மாத இறுதியில் தெரிய வரும். பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு காரணமாக பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும். மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த விலை குறைப்பு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கருதுகிறது.