குட் நியூஸ்..! விரைவில் கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக பெறலாம்..!
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்டத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டவை. அதன் தொடர்ச்சியைத் தான், உங்கள் அரசான, நமது அரசான இந்த திராவிட மாடல் அரசும் இதை செய்திருக்கிறது. அதற்கு எடுத்துகாட்டு தான் இன்றைய விழா…இன்றைய நிகழ்ச்சியில், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு, 655 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து, இன்னும் ஒரு மிக முக்கியமான திட்டத்தையும் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன். “நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்” என்று இதற்குப் பெயர். கிராமப்புற மக்கள், அவர்களுடைய நத்தம் வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிய வந்தது. அதை எளிமையாக்குவதுதான் இந்த புரட்சிகரமான திட்டம்!
தமிழ்நாடு வருவாய்த்துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல்முறை! காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். அதைக் கணினி மூலமாக உறுதி செய்கின்ற திட்டம் இது.
முதல்கட்டமாக, 75 இலட்சத்து 33 ஆயிரத்து 102 பட்டாதாரர்கள் இந்த இணையவழி சேவை மூலமாக பயன்பெற போகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறினார்.