நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள், அமேசான்!
நியூயார்க்: கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களின் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது என ‘Semafor’ என்கிற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனத்தை பொறுத்தவரை அமேசானுக்கு சொந்தமான பிரைம் வீடியோ மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோ பிரிவு ஊழியர்கள் நூற்றுக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்கிறது. அமேசான் வீடியோ ஹெட் மைக் ஹாப்கின்ஸ் இந்த பணிநீக்கத்தை உறுதி செய்துள்ளதாக ‘தி இன்ஃபர்மேஷன்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல், அமேசானுக்குச் சொந்தமான லைவ்ஸ்ட்ரீமிங் தளமான Twitch ஊழியர்கள் 500 பேர் இந்த வாரம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து இதுபோன்ற பணிநீக்கங்கள் அவ்வப்போது நடந்து வருவது தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.