மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்..!

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி ஏ.ஐ-யால், கூகுள் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. ஜெமினி ஏ.ஐ. அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில், சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு ஜெமினி ஏ.ஐ. தவறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பதில் அளித்திருந்தது. இதையடுத்து பிரச்சினை தீவிரமடைந்த நிலையில், இந்திய அரசாங்கத்திடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் மோடி பற்றி ஜெமினி அளித்த ஆதாரமற்ற தகவல்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், தனது இயங்குதளம் நம்பகத்தன்மையற்றது என்று தெரிவித்தது.” என்றார்.

செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ.ஐ. தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. ஆதாரமற்ற, பாரபட்சமான, தவறான தகவல் அல்லது சரிபார்க்கப்படாத முடிவுகளை வழங்குவதற்காக உலகளவில் ஜெமினி ஏ.ஐ. எதிர்கொண்டுள்ள விமர்சனங்ளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இவ்வாறு தெரிவித்தது.

‘ஏ.ஐ. இயங்குதளங்கள் இந்திய நுகர்வோரை மதிக்க வேண்டும். அந்த இயங்குதளங்கள், நம்பகத்தன்மையற்ற அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கத்தை உருவாக்கலாம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விதிமீறல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பினால், இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், ஏ.ஐ. இயங்குதளங்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்’ என்று மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *