கூகுள் மேப் பொய் சொல்லாது!! அப்படினு இனி யாராவது வருவீங்களா? ஊட்டிக்கு அருகே நடந்த சம்பவம்!
தமிழ் நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கூகுள் மேப்பை பின்பற்றி ஓட்டப்பட்ட கார் இறுதியில் போலீஸாரை உதவிக்கு அழைக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளது. எந்த மாதிரியான பிரச்சனை அது? என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கூகுளின் மிக சிறந்த மென்பொருள் கூகுள் மேப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூகுள் மேப்பின் வருகையால், புதிய இடங்களுக்கு இடையிடையே வழிக்கேட்டு செல்வது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. மேலும், கூகுள் மேப்பினால் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அத்துடன், நிறைய பேர் தைரியமாக தனியாகவே பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு, கூகுள் மேப்பினால் பயன்கள் அதிகளவில் இருக்கும் அதேவேளையில், சிறு சிறு பிரச்சனைகளும் அவ்வப்போது ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. குறிப்பாக, முறையான சாலை வசதிகள் அற்ற கிராமப் புறங்களிலும், மலைப்பாதைகளிலும் கூகுள் மேப் தவறான வழியை காட்டுவதாக நிறைய பேர் கூற கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது, தமிழ்நாட்டிற்கு வந்த கர்நாடக கார் ஓட்டி கூகுள் மேப்பினால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள செழிப்பான நகரமான கூடலூருக்கு கர்நாடகாவில் இருந்து சிலர் தங்களது விலையுயர்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தொடர் விடுமுறையை கொண்டாட வந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா – கர்நாடகா என மூன்று மாநிலங்களையும் இணைக்கும் விதத்தில் அமைந்த நகரம் கூடலூர் ஆகும். இங்கிருந்து சில கிமீ பயணம் செய்தால் விரைவாகவே ஊட்டிக்கு சென்றுவிடலாம்.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த அந்த கர்நாடக சுற்றுலா பயணிகள் பின் வீட்டிற்கு திரும்ப தயாராகி உள்ளனர். இதற்காக அவர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி உள்ளனர். கூகுள் மேப் காட்டிய வழித்தடத்தில் காரில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பெரிய படிக்கட்டில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
படிக்கட்டின் முதல் சில படிக்கட்டுகளை பார்த்துவிட்டு, இறங்கிவிடலாம் என தவறாக இந்த கார் ஓட்டி கணித்துவிட்டார். ஏனெனில், கீழே இருந்த படிக்கட்டுகள் நன்கு உயரமானதாக இருந்தன. அதாவது, நடந்து செல்வதாக இருந்தால், எளிதாக சென்றுவிடலாம். ஆனால், காரில் சென்றால், காரின் அடிப்பகுதி அடிப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
உங்களுக்கு நேரம் சரியாக இல்லையென்றால், காரின் அடிப்பக்க குழாய்கள் ஏதேனும் சேதம் அடைவதற்கும், ஃப்யுல் டேங்க் சேதமடைவதற்கும் கூட வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து சூதாரித்துக் கொண்ட இந்த கர்நாடக சுற்றுலா பயணிகள் தங்களது ஃபார்ச்சூனர் காரை உடனடியாக நிறுத்திவிட்டனர். பின்னர், காருக்கு வெளியே வந்து கீழ் படிக்கட்டுகளில் இறங்க முடியுமா என பார்வையாலேயே அளந்தனர்.
முடியாது என உணர்ந்ததை அடுத்து, சாலையில் சென்றவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்கு முன்னதாக, கார் தானாக சரிந்து செல்லாமல் இருக்க முன் சக்கரங்களில் கல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி காவலர் குடியிருப்பாக இருந்ததால், காவலர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், காவலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அங்கிருந்து சாலைக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டு உள்ளது.