963.2 பில்லியன் ரூபாய் மதிப்பு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட அரசு திட்டம்..!
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு 5ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலம் விடப்பட்டது. பெரும்பாலான தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னிலை வகித்தன.
இந்த நிலையில் தொலைத்தொடர்பை மேலும் வலுவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் அலைகற்றை ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையில் உள்ள நெட்வொர்க்குகளின் தரம் மற்றும் கவரேஜை மேம்படுத்த அலைக்கற்றைகளை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான திட்டத்திற்கு இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
963.2 பில்லியன் ரூபாய் (11.6 பில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள அலைக்கற்றைகளை அரசு, இருப்பு விலையில் விற்கும் என்று இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஆகிய எட்டு அலைவரிசைகளில் மொத்தம் 10,523.1 மெகாஹெர்ட்ஸ் ஏர்வேவ்ஸ் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏலத்திற்கான காலக்கெடுவையும், தேதியையும் அரசு இன்னும் உறுதியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலைக்கற்றை ஏலமானது திவால் நிலையில் உள்ள நிறுவனங்களிடம் உள்ள அலைக்கற்றைகளை உள்ளடக்கியது ஆகும். இது அரசின் நிதியை உயர்த்துவதற்கும், நாட்டில் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் அலைக்கற்றைகள் தொலைத்தொடர்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, நுகர்வோருக்கான கவரேஜை விரிவுபடுத்தும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இந்த அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக பல கோடி பயனர்களை உள்ளடக்கி நாட்டில் வயர்லெஸ் சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் விரிவான சேவையை வழங்க முடியும்.
2022ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. லாபத்தின் மீதான அழுத்தம் நிறுவனங்களின் ஏலங்களின் திறனையும் அளவையும் பாதிக்கும் என்று பெக்ஸ்லி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உத்கர்ஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், இந்திய அரசு 19 பில்லியன் டாலர்களை ஈட்டியது. இதில் ரிலையன்ஸ் ஜியோ 11 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை அலைக்கற்றைக்காகச் செலவழித்து முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.