அரசு வேலை: கணக்கு இடிக்குதே – அண்ணாமலைக்கு பிடிஆர் குட்டு..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதன் பிறகு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒன்பது தலைமுறையாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது. இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும்.” என்றும் அண்ணாமலை கூறினார்.

இதனை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கணகராஜ், “இவங்களுக்கெல்லாம் கூச்சமே இருக்காதா? இவங்க தலைவரு ஆண்டுக்கு 2 கோடி வேலைன்னாரு. அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு 2.397 கோடி வேலை தருவாராம். முதல்ல உங்க தலைவர்ட்ட 100 நாள் வேலையை கொடுக்கச் சொல்லுங்க.ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்க.” என தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கோள் காட்டியுள்ள தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் மொத்தமே 9.5 லட்சம் அரசு பணிகள் உள்ள நிலையில், எப்படி 2.397 கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம். பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?” என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *