தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த அரசு நினைத்தால் ஒரு நாள் போதுமே! உயர்நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த அரசு நினைத்தால் ஒரு நாள் போதுமே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொருநை ஆறு என அழைக்கப்படுவது தாமிரபரணி. இது வெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு நெல்லை- தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
விவசாயிகளின் துயரையும் துடைக்கிறது. ராமாயணத்தில் தாமிரபரணி ஆறு குறித்து குறிப்புகள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆற்றில் குப்பைகளும் கழிவுகளும் இருக்கின்றன. இதனால் ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.
அத்துடன் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மிக அதிக கனமழையால் வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. இதனால் தென் சென்னையே வழக்கத்திற்கு மாறாக நீரில் தத்தளித்தது. இது போன்ற சம்பவத்திற்கு நீர் நிலைகள் முறையாக தூர்வாரப்படாதது காரணம் என சிலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என நெல்லையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவோர் மீது ஏன் அபராதம் விதிக்கக் கூடாது? தாமிரபரணி ஆற்றை அரசு நினைத்தால் சுத்தப்படுத்த ஒரு நாள் போதும். ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.