இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட 5 பொது துறை வங்கிகளின் பங்குகளை விற்கும் மத்திய அரசு..!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐந்து பொது துறை வங்கிகள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யின் குறைந்தபட்ச பொது பங்குதாரர் (MPS) விதிமுறைகளைப் பின்பற்ற, அரசின் பங்குகளை 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவை செயலாளர் விவேக் ஜோஷி இந்த தகவலை அளித்துள்ளார்.
மார்ச் 31, 2023 நிலவரப்படி, 12 பொது துறை வங்கிகளில் நான்கு வங்கிகள் மட்டுமே குறைந்தபட்ச பொது பங்குதாரர் விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. இதனைச் சரி செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
3 வங்கிகள்: இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவை செயலாளர் விவேக் ஜோஷி கூறுகையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 3 பொது துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை பொது சந்தையில் வெளியிட்டுச் செபி விதிகளைப் பூர்த்தி செய்துள்ளது.
5 வங்கிகள் முயற்சி: மீதமுள்ள ஐந்து வங்கிகள் குறைந்தபட்ச பொது பங்குதாரர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை திட்டங்களை உருவாக்கியுள்ளன என்று அவர் பிடிஐ உடனான பேட்டியில் தெரிவித்தார்.
அதிக அரசு பங்கு வைத்திருக்கும் வங்கிகள்: தற்போது சந்தை நிலவரத்தின் படி
1.டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பஞ்சாப் & சிந்த் வங்கியில் அரசின் பங்கு 98.25 சதவீதம்.
2.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அரசின் பங்கு 96.38 சதவீதம்,
3.இதேபோல் UCO வங்கியில் அரசின் பங்கு 95.39 சதவீதம்,
4.சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா-வில் அரசின் பங்கு 93.08 சதவீதம்,
5.பேங்க் ஆப் மகாராஷ்டிரா-வில் அரசின் பங்கு 86.46 சதவீதம்
செபி விதிமுறைகள்: செபி விதிமுறைகளின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் 25 சதவீத குறைந்தபட்ச பொது பங்குதாரர் (MPS) அதாவது பொது சந்தை முதலீட்டாளர்களிடம் 25 சதவீத பங்குகள் இருக்கும் வேண்டும். என்றாலும், பொதுத் துறை வங்கிகளுக்கு இந்த விதியில் சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 வரை இந்த தேவையைப் பூர்த்தி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை குறைக்கும் வழிமுறைகள்: பொது வெளியீடு (FPO) அல்லது தகுதிபெற்ற நிறுவன முதலீட்டு வைப்பு (QIP) போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசின் பங்குகளை குறைக்க வங்கிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சந்தை நிலவரத்தைப் பொறுத்து, ஒவ்வொரு வங்கியும் பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்,” என்று ஜோஷி மேலும் கூறினார்.
காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல், தேவையை பூர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுத்துறை வங்கி பங்குகளை குறைக்கும் விதிமாக இந்த பங்கு இருப்பை குறைப்பதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இதோடு அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத சில சம்பவங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அனைத்து பொது துறை வங்கிகளும் தங்கள் தங்கக் கடன் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜோஷி தெரிவித்தார்.