கிராமி விருதுகள் 2024 : உலகளாவிய சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்ற இந்திய இசைக்குழு சக்தி..
உலகளவில் இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது தான் கிராமி விருதுகள். அமெரிக்காவை சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவை சேர்ந்த ‘சக்தி’ இசைக்குழுவுக்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் சமீபத்திய This Moment”என்ற ஆல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 8 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த கிராமி விழாவில், சக்தி இசைக்குழு தவிர, மற்ற கலைஞர்களான சூசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டனர். கடுமையான போட்டி இருந்தபோதிலும், சக்தி சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்று அசத்தி உள்ளது.
This Moment ஆல்பம் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வெளியானது. சக்தி இசைக்குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு இசைக்கலைஞர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் பகுதியை ரெக்கார்டிங் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
சக்தி குழு
சக்தி என்பது இந்திய பாரம்பரிய இசையை ஜாஸ் இசையுடன் கலந்த ஒரு அற்புதமான ஃப்யூஷன் இசைக்குழு. 1973 ஆம் ஆண்டு ஜாஸ் கிதார் கலைஞரான ஜான் மெக்லாக்லின் என்பவரால் கலைநயமிக்க பாரம்பரிய இந்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிறுவப்பட்டது, இந்த இசைக்குழு மேற்கத்திய மரபுகளுக்கு அப்பால் இசை எல்லைகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.
1976-ம் ஆண்டு சக்தி, 1977-ம் ஆண்டு A Handful of Beauty (1977), Natural Elements உள்ளிட்ட பல ஆல்பங்களை இசைக்குழு வெளியிட்டது, கடந்த ஆண்டு, சக்தி இசைக்குழு தனது 50வது ஆண்டு விழாவை 27 நகரங்களில் ஒரு விரிவான சுற்றுப்பயணத்துடன் கொண்டாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்கா முழுவதும் 17 நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த சுற்றுப்பயணம் இசைக்குழுவின் செழுமையான வரலாற்றைக் கொண்டாடியது மட்டுமின்றி, அதன் புகழ் மற்றும் உலகளாவிய இசை சமூகத்தில் அவர்கள் செலுத்தும் மரியாதையை காட்டும் விதமாக அமைந்தது.