சம்மரில் எடை குறைக்க செம ஐடியா!! ஜூஸ் குடிச்சே ஜம்முனு குறைக்கலாம்!!
உடல் பருமன் உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அவசர உணவு, அவசர வேலை, அவசர வாழ்க்கை என அனைத்தும், அவசர அவசரமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் உடல் எடையும் அவசரமாகவே அதிகரிக்கின்றது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம்.
தொப்பையில் சேரும் கொழுப்பு அடாவடி கொழுப்பாக இருக்கின்றது. இதை கரைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. சிலர் ஜிம், டயட் என முயற்சி செய்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் கோடைகால பானங்கள் (Summer Drinks For Weight Loss)
கோடை காலம் தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் வெயில் கொளுத்த தொடங்கிவிடும். இந்த நேரத்தில் நம்மை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிக அவசியமாகும். மேலும், கோடையில் அனைவரும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். ஏனெனில் கோடையில் தண்ணீர் பற்றாக்குறையால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இவற்றை தவிர்க்க சில ஆரோக்கியமான பானங்கள் நமக்கு உதவும். இதைத் தவிர இந்த பானங்கள் நம் உடல் எடையை குறைக்கவும் உதவும். இந்த பானங்கள் இயற்கையான முறையில் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதோடு (Weight Loss) உடலுக்கு தேவையான ஆற்றலையும், புத்துணர்ச்சியையும், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.
கோடையில் உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இளநீர்
இளநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கின்றது. இளநீர் சருமத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது.
வெள்ளரி சாறு
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உட்கொள்வது ஆரோக்கியத்தின் கண்ணோட்டத்தில் மிக அவசியமானாதாகவும் நல்லதாகவும் கருதப்படுகின்றது. வெள்ளரி சாறும் அதிக பலன்களை அளிக்கும். வெள்ளரிக்காயில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக குறைவு. குறைந்த கலோரி கொண்ட இந்த பானத்தை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்தவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.
எலுமிச்சை சாறு
கோடை காலத்தில் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க எலுமிச்சை சாறு சிறந்ததாக கருதப்படுகிறது. எலுமிச்சை பானத்தை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
பழச்சாறுகள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் குறைக்கவும் பழச்சாறுகள் உதவும். இதில் கிவி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களைப் பயன்படுத்தலாம். பழங்கள் மூலம் பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இதன் மூலம் உடலுக்கு நார்ச்சத்து அதிகமாக கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் தேவையில்லாத, ஆரோக்கியமில்லாத பிற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.