டென்னிஸ் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்த இந்திய வீரர் சுமித் நாகல்.. இந்திய அளவில் 2வது வீரர்
சிட்னி : டென்னிஸ் வரலாற்றில் தரவரிசையின்படி இடம் பெற்ற வீரர் ஒருவரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் சுமித் நாகல்.
தற்போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பங்கேற்றார். கடந்த 2021இல் சுமித் நாகல் ஆஸ்திரேலிய ஒபனில் பங்கேற்ற போது முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறி இருந்தார். அதே போலவே, இந்த முறையும் நடக்கும் என டென்னிஸ் ரசிகர்கள் எண்ணிய நிலையில், அவர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
முதல் சுற்றில் சுமித் நாகல், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்லிக்கை சந்தித்தார். அவர் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 31வது இடத்தை பெற்று இருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைமுறைப்படி தரவரிசையின் படி வீரர்களை முதல் சுற்றுக்கு பட்டியலிடுவார்கள். தரவரிசையில் நூறுக்கும் கீழே பின்தங்கி இருக்கும் வீரர்கள் அல்லது முதல் சுற்றில் தரவரிசையில் பின்தங்கி இருப்பதால் வாய்ப்பு பெற முடியாத வீரர்களுக்கு தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
அந்த தகுதிச் சுற்றில் பங்கேற்று வெற்றி பெற்ற சுமித் நாகல், 2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். முதல் சுற்றில் அவர் 31வது தரவரிசையில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை 6-4, 6-2, 7-6 [7-5] என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு சென்ற சுமித் நாகல் பல்வேறு டென்னிஸ் சாதனைகளையும் படைத்தார்.