கார் ஏற்றுமதியில் வளர்ச்சி… பிற வாகனங்களில் வீழ்ச்சி… வெளியான ரிப்போர்ட்!
இந்தியாவில் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. அந்த அளவிற்கு உற்பத்தித் திறனும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது 2023ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், 2022ஆம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, பல வெளிநாட்டு சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக மொத்த வாகன ஏற்றுமதி 2023ஆம் ஆண்டில் 21 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகவும் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதி 42லட்சத்து 85ஆயிரத்து 809 வாகனங்களாக இருந்தது. இதுவே, 2022ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 52 லட்சத்து 4ஆயிரத்து 966 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், பயணிகள் வாகனப் பிரிவில் சற்று வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 6லட்சத்து 77ஆயிரத்து 956 பயணிகள் வாகனம் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதே 2022 காலகட்டத்தில் 6லட்சத்து 44ஆயிரத்து 842 வாகனங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, 2023 காலகட்டத்தில் ஏற்றுமதியில் 5% வளர்ச்சியை பயணிகள் வாகனங்கள் கண்டிருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி விவரங்களையும் வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகன ஏற்றுமதி சிறிய வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், பிற வாகன ஏற்றுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருசக்கர வாகனப் பிரிவில் 32லட்சத்து 43ஆயிரத்து 673 வாகனங்கள் 2023ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2022 காலகட்டத்தில் 40லட்சத்து 53ஆயிரத்து 254 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது கிட்டத்தட்ட 20 விழுக்காடு வீழ்ச்சியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஏற்றுமதி குறித்து பேசிய SIAM இயக்குநர் ராஜேஷ் மேனன், ”புதிய வாகன வெளியீடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் வளைகுடா பகுதி சந்தைகளில் இருந்த தேவையால் 2023 ஆம் ஆண்டின் பயணிகள் வாகன ஏற்றுமதி சிறிய வளர்ச்சியை பதிவு செய்தது. 2022ஆம் ஆண்டில் வாகனங்களுக்குத் தேவையான செமி-கண்டக்டர்களின் விநியேகத்தில் பிரச்னை இருந்தது. அவை நிவர்த்தி செய்யப்பட்டதன் விளைவாக பயணிகள் வாகன ஏற்றுமதியில் முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. எனினும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தேவை உலக சந்தைகளில் குறைந்து வருவதால், அதன் ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பயணிகள் வாகனப் பிரிவில் மாருதி சுசூகி இந்தியா ஏற்றுமதி எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக மாருதி சுசூகி 202,786 வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,92,071 வாகன ஏற்றுமதியில் இருந்து ஆறு விழுக்காடு அதிகமாகும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டேய் மோட்டார் இந்தியா, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 1,29,755 பயணிகள் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1,19,099 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிறியளவு வளர்ச்சியாகும். இந்தியாவில் உள்ள பிற பயணிகள் வாகன உற்பத்தியாளர்களில், கியா 47,792 வாகனங்களையும், வோக்ஸ்வாகன் 33,872 வாகனங்களையும், நிசான் 31,678 வாகனங்களையும், ஹோண்டா 20,262 வாகனங்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.