குரு-ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம்… பலன்களும் பரிகாரங்களும்..!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன.
குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.
குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை போராட்டமாக அமையும். லக்னத்திற்கு 10ஆம் இடம் என்பது தசம கேந்திரம். வியாபார, தொழில், உத்யோகத்தில் குரு தனித்து இருப்பதால் வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்படும்.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும்.
1. மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். பணவரவிற்கு பஞ்சமிருக்காது.
2. ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள்.
3. மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்.
4. கடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும்.
5. சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.
6. கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும்.
7. துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும்.
8. விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள்.
9. தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.
10. மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள்.
11. கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.
12. மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள்.