அடுத்தடுத்து படங்களை வெளியிடும் ஜிவி பிரகாஷ்! கோலிவுட்டின் அடுத்த விஜய் சேதுபதி?
இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் தற்போது நடிகர், தயாரிப்பாளர் என வளர்த்துள்ளார். அவரது நடப்பில் வெளியாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இளைஞர்களை டார்கெட் செய்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ரெபெல் படம் திரையரங்குகளில் வெளியானது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4ம் தேதி கள்வன் படமும், ஏப்ரல் 11ம் தேதி டியர் படமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படமும் மே மாதம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த வாரத்தில் படங்களை வெளியிடுவதால் கோலிவுட்டின் அடுத்த விஜய் சேதுபதியா ஜிவி பிரகாஷ் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் கள்வன் படத்தின் இசைவெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “’கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா சார் தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான் ‘கள்வன்’ படம். நாங்க ‘விடுதலை’ படம் ஷூட் பண்ண இடத்தில் தான் ‘கள்வன்’ படமும் ஷூட் பண்ணினார்கள்.
காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது. நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, “இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்” என்றார். நடிகை இவானா, “‘நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷூடன் சேர்ந்து நடிக்கிறேன். அப்போது அவருடன் சரியாக நிறைய பேச முடியவில்லை. இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். பாரதிராஜா சாருடன் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமை. படத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏப்ரல் 4 அன்று உங்கள் இதயங்களை ‘கள்வன்’ நிச்சயம் திருடுவான்” என்றார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசும் போது, “இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.