Hanuman vs Guntur Kaaram Box Office: ஹனுமான் உடன் கிளாஷ் விட்ட மகேஷ் பாபு.. மரண அடி வாங்கிடுச்சே!
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் டோலிவுட்டில் வெளியான நிலையில், மகேஷ் பாபுவின் படம் முதல் நாள் மட்டுமே வசூல் ஈட்டியது. அடுத்தடுத்து அந்த படத்தின் வசூல் அதள பாதாளத்திற்கு சென்ற நிலையில், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த ஹனுமான் திரைப்படம் பான் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது மகேஷ் பாபு ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அடுத்தடுத்து ஃபிளாப்: கீர்த்தி சுரேஷ் உடன் மகேஷ் பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது என்கின்றனர். நெகட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு குவிந்த நிலையில், முதல் நாளுக்கு பிறகு அந்த படத்தை மகேஷ் பாபு ரசிகர்களே ஆதரவு கொடுக்காமல் விட்டு விட்டதாக கூறுகின்றனர்.
ஃபேக் வசூல் அறிவிப்பா?: முதல் நாளிலேயே மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் 94 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் அப்படியே அடுத்தடுத்தடுத்த நாள் அறிவிப்புகளை வெளியிடாமல் அமைதியாகி விட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், உலகளவில் அந்த படத்தின் வசூல் மிகவும் குறைவாக இருப்பதே முதல் நாள் அறிவிப்பு பொய்யா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.
150 கோடி வசூல்: மகேஷ் பாபு தனது அம்மா ரம்யா கிருஷ்ணனுடன் சேர போராடும் கதையாக குண்டூர் காரம் உருவாகியிருந்த நிலையில், அந்த படத்தை ரசிகர்கள் பெரிதாக விரும்பி சங்கராந்தி பண்டிகைக்கு கூட பெரிதளவில் தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இதுவரை மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 100 கோடி ரூபாய் வசூலையும் உலகம் முழுவதும் 150 கோடி வசூலையும் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடித்து நொறுக்கிய ஹனுமான்: அதேசமயம் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வினய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான ஹனுமான் திரைப்படம் முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், இந்தி பெல்டில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ஒரு வாரத்தில் 155 கோடி வசூலை ஈட்டி மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. டோலிவுட்டிலேயே ஹனுமான் திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டது மகேஷ் பாபு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு காரணமாக வட இந்தியா முழுவதும் ராம பக்தர்கள் தியேட்டர்களுக்கு சென்று ஹனுமான் படத்தை பார்த்து வருவது தான் இந்த இமாலய வெற்றிக்கு காரணம் என்கின்றனர். பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தில் ஹனுமானை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், இந்த படத்திற்கு பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ளது.