ஹேப்பி பர்த்டே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..!
வித்தியாசமான பாணியில் நடித்து, பல வெற்றிப் படங்களை அளித்து வரும் விஜய் சேதுபதியைத் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதலாம். கமல், விக்ரம், சூர்யா, தனுஷ் வரிசையில் நடிப்புக்குச் சவாலாக விளங்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தென்மேற்குப் பருவக்காற்று படத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையை ஒரு படமாகவே எடுக்கலாம்.
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. 5-ம் வகுப்பு வரை அங்குதான் படித்தார். பிறகு சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டார். ஆரம்பத்தில் சினிமா மீது ஆர்வம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார். டி.பி. ஜெயின் கல்லூரியில் படித்தார். குடும்பத்துக்காக துபாய்க்குச் சென்று வேலை பார்த்தார். துபாயில் வேலைக்குச் சென்றபோது அவருடைய அண்ணன், விஜய் சேதுபதியை வைத்து நிறைய புகைப்படங்கள் எடுத்து உன் முகம் போட்டோஜெனிக்காக உள்ளது என்று அடுத்த ஆசை விதையைத் தூவியிருக்கிறார். இந்தியாவுக்குத் திரும்பினார். கடனில் தவித்தபோது சினிமாவில் நடிக்கலாம் என முடிவு செய்தார் விஜய் சேதுபதி. கூத்துப்பட்டறையில் கணக்காளராகப் பணியாற்றினார். நடிப்புக்கலையை அருகில் இருந்து பார்த்து அதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டார். விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோதே திருமணம் செய்துகொண்டார். இண்டீரியர் டெகரேஷன் தொடர்பான வேலைகளுக்கு முயற்சி செய்து பார்த்தார். ஆனாலும் சினிமா மீதான ஆசையில் வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடினார். அப்போது கர்ப்பமாக இருந்த விஜய் சேதுபதியின் மனைவிக்கு இது பிடிக்கவில்லை. வாய்ப்பு தேடக் கூடாது என்று சத்தியம் வாங்கியுள்ளார். அன்பு இருக்கும் இடத்தில் பொய் சத்தியம் எதுவும் செய்யாது என்று எண்ணி தொடர்ந்து வாய்ப்புகளை விடாமல் தேடியுள்ளார்.
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவான விண்ட் குறும்படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. குறும்படங்களில் நடித்ததால் மணிகண்டன், கார்த்திக் சுப்புராஜ் எனப் பலரும் பழக்கமாகி பிறகு பிற்காலத்தில் அவர்களுடைய இயக்கத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. தொலைக்காட்சித் தொடரிலும் சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்தார். ஒரு நல்ல வாய்ப்பை அளித்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. 2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் விஜய் சேதுபதி. இந்தப் படம் தமிழ்த் திரையுலகுக்கு ஒரு நல்ல கதாநாயகனையும் இயக்குநரையும் அளித்தது. சூது கவ்வும்கதாநாயகனாக நடித்த பிறகும் சுந்தரபாண்டியன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2012-ல் வெளியான பீட்சா படம் விஜய் சேதுபதிக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் பிரசாந்த், வைபவ் போன்றோர் நடிக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாக விஜய் சேதுபதியைத் தேடி வந்தது பீட்சா வாய்ப்பு. பீட்சா படத்தை தமிழக ரசிகர்கள் அமோகமாக வரவேற்றார்கள். இதனால் விஜய் சேதுபதிக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.அடுத்த மூன்று படங்களும் அட்டகாசம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
மூன்றும் விதவிதமான கதாபாத்திரங்கள். ஒரு படத்தில் சாதுவாக, எல்லாம் மறந்தவராகவும் அடுத்த இரு படங்களிலும் ரெளடியாக நடித்தாலும் அதிலும் வித்தியாசம் காண்பித்தார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி விஜய் சேதுபதியின் திறமையை வெளிப்படுத்தின. மூன்றுமே பெரிய வெற்றியைப் பெற்றதால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரானார் விஜய் சேதுபதி.அடுத்து வெளியான ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சூது கவ்வும் போல ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்தவருக்கு அழகாக அமைந்தது நானும் ரெளடி தான். அடுத்து வெளிவந்த சேதுபதி, நல்ல வெற்றியை அடைந்தது.நானும் ரெளடி தான்காதலும் கடந்து போகும், இறைவி படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தன. விமர்சன ரீதியில் இரு படங்களும் கவனம் பெற்றன. அடுத்து மீண்டும் இரு அருமையான படங்கள் விஜய் சேதுபதிக்கு அமைந்தன. தர்மதுரை, ஆண்டவன் கட்டளை. மசாலா இல்லாமல் நல்ல கதையுடன் படங்கள் எடுக்கப் பிரியப்படும் சீனு ராமசாமியும் மணிகண்டனும் விஜய் சேதுபதிக்கு அருமையான கதாபாத்திரங்களை வழங்கினார்கள். இந்த இரு படங்களும் விஜய் சேதுபதியின் நடிப்புத்திறமையை நன்கு வெளிப்படுத்தின.அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கவண் மற்றும் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா என இரு வெற்றிப் படங்கள் அமைந்தன. வித்தியாசமான திரைக்கதை மற்றும் விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பால் விக்ரம் வேதா பெரிய வெற்றியை அடைந்தது. அடுத்ததாக 96 தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்து ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தது. விஜய் சேதுபதியின் நடிப்புத் திறமைக்குச் சவாலாக அமைந்தது ராம் கதாபாத்திரம். முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் விஜய் சேதுபதி. இதன்பிறகு பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் வித்தியாசமான முறையில் தன்னுடைய திரை வாழ்க்கையை அணுகி வருகிறார் விஜய் சேதுபதி. பேட்ட படத்தில் ரஜினியுடனும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடனும் விக்ரம் படத்தில் கமலுடனும் நடித்தது இவருடைய வித்தியாசமான அணுகுமுறையை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. நல்ல கதாபாத்திரம் எந்தப் படத்தில், எந்த மொழியில் கிடைத்தாலும் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்கு வில்லன்களாக நடித்தது மட்டும் இல்லாமல் பாலிவுட்டுக்கும் சென்று ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
சினிமாவில் தனக்குத் தெரிந்த நண்பர்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே பல படங்களில் கேமியா ரோலில் நடித்து கை கொடுத்தார். விஜய் சேதுபதியை, ரசிகனை ரசிக்கும் தலைவன் என மக்கள் ஏற்றுக் கொண்டதால் மக்கள் செல்வன் என்னும் பெயரையும் சூட்டி விட்டனர்.