Happy Teeth: காலை உணவைத் தவிர்த்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுமா? #Bad Breath
வாய் துர்நாற்றத்துக்கான காரணங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவைசிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி.
`நெருங்கிய நண்பன்கூட உன் வாய் துர்நாற்றத்தைப் பற்றி சொல்ல மாட்டான்’ என்றொரு வாசகம் உண்டு.
வாய் துர்நாற்றம் மிகவும் பொதுவான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு முக்கியமான காரணம் வாய் சுகாதாரம் பேணாமல் இருப்பது. பிரஷ் செய்யும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல், கவனம் செலுத்தாமல் முறையாக பிரஷ் செய்வது அவசியம்.
பல நேரங்களில் வேறு வேலை செய்தபடியோ, மொபைல், டிவி பார்த்துக்கொண்டோ முறையாக பிரஷ் செய்வதில்லை. பற்களின் உள்பக்கம் பிரஷ் செய்யும் பழக்கம் பலருக்கும் இருப்பதில்லை. அதே போல இரவு உறங்குவதற்கு முன்பு பிரஷ் செய்யும் பழக்கமும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை.
இதனால் வாயில் ஏதாவது உணவுப்பொருள் சிக்கியிருந்தால் அடுத்த நாள் காலை வரைக்கும் அது வாயில் தங்கியிருக்கும். இதனால் அந்தப் பகுதியில் பாக்டீரியாக்கள் உருவாவது, நோய்த்தொற்று ஏற்படுவது போன்றவை நடக்கும். இவையெல்லாம்தான் வாய் சுகாதாரத்தைக் குறைத்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணங்கள்.
சொத்தைப் பல்:
வலி கொடுக்கும் வரை சொத்தைப் பல்லை பற்றி கண்டுகொள்வதில்லை. பல் சொத்தையான இடத்தில் உணவுப்பொருள் சென்று சிக்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். துர்நாற்றத்துக்கு பல், வாய் சார்ந்த பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும் என்பதில்லை. கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படலாம். புற்றுநோயாளிகளுக்கு வாய் உலர்வாக இருக்கும் என்பதால் துர்நாற்றம் ஏற்படலாம்.