Happy Teeth: பல் மருத்துவரிடம் சென்றாலே பற்களை `க்ளீன்’ செய்யச் சொல்வது ஏன்?
ஏன் பல் மருத்துவர்கள் அதைச் செய்யும்படி அடிக்கடி வலியுறுத்துகிறார்கள் என்று சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தாவிடம் கேட்டோம்:
நாம் தினமும் பிரஷ் செய்தாலும் சில நுண்ணிய இடங்களில் டூத் பிரஷ்ஷால் நுழைந்து முழுமையாகச் சுத்தப்படுத்த இயலாது.
எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ள பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்கேலிங் என்பது சாதாரணமாக பற்களைச் சுத்தப்படுத்தும் முறைதான். இரண்டு பற்களுக்கும் இடையில் சிக்கியிருக்கும் துணுக்குகள், அழுக்கள் இந்தச் சிகிச்சையின்போது நீக்கப்படும். பற்களில் கறை இருந்தாலும் அதை ஸ்கேலிங் செய்யும்போது நீக்குவார்கள்.
ஒருவர் எவ்வளவு நன்றாக பிரஷ் செய்து பற்களைப் பராமரித்தாலும், பல் மருத்துவர்களே ஆனாலும் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கேலிங் செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி ஸ்கேலிங் செய்வதால் பற்களில் இருக்கும் எனாமல் போய்விடும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. ஸ்கேலிங் செய்து கொள்வதற்கும் பற்களின் எனாமலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஸ்கேலிங் செய்வதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படாது.
ஆண்டுக்கு ஒருமுறை ஸ்கேலிங் செய்துகொள்வது அவசியம். அதிகபட்சம் கூடுதலாக ஆறு மாதங்கள் தள்ளிப்போடலாமே தவிர, அதிகம் தாமதிக்கக் கூடாது. அது பற்களின் ஆரோக்கியத்தை பாதித்து ஈறுகள் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அவற்றை மேலும் அதிகரிக்கும்.
18 முதல் 30 வயது வரை முறையாக பிரஷ் செய்து, வாய் சுகாதாரத்தைப் பேணும்போது நாமே பற்களைப் பராமரித்துக் கொள்ள முடியும். ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டும் பல் மருத்துவரை அணுகினால் போதுமானது. எல்லா பற்களும் முளைத்த பிறகு, அதாவது 18 வயதுக்குப் பிறகு சரியாக பற்களைப் பராமரிக்கவில்லை என்றால் ஆண்டுக்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பெண்கள் 30 வயதுக்கு மேல், ஆண்கள் 35 வயதுக்கு மேல் கண்டிப்பாக பற்களை ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பற்களில் கூச்சம் ஏன்?
ஸ்கேலிங் சிகிச்சை செய்யும்போதும், செய்த பிறகும் சிலருக்கு பற்களில் கூச்சம் இருக்கும். பற்களுக்கும் ஈறுகளுக்கும் நடுவில் நுண்ணிய காற்றுப்பைகள் இருக்கும். பற்களின் நரம்புகளுக்கும் இட்டுச்செல்லும் வகையில் அந்த காற்றுப்பைகள் அமைந்திருக்கும். சுத்தப்படுத்தும் சிகிச்சையில் அந்த காற்றுப்பைகளில் அடைந்திருக்கும் துணுக்கள், அழுக்குகள் வெளியேறும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் நரம்புகள் காற்றுக்கு வெளிப்படுவதால் கூச்சம் இயல்பாக உருவாகும். அது சிறிது நேரத்திலேயே சரியாகிவிடும்.
வொயிட்டனிங் சிகிச்சை
பற்களின் நிறத்தை மேம்படுத்துவதற்கு வொயிட்டனிங் சிகிச்சை (Whitening Treatment) செய்துகொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அடிப்படையில் வொயிட்டனிங் சிகிச்சையில் பற்களிலிருக்கும் கறைகளை நீக்கிவிட்டு, ப்ளீச் (Bleach) செய்வார்கள். வொயிட்டனிங் சிகிச்சை செய்தால் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் பற்கள் `பளிச்’ என்று மின்னும் வெள்ளை (Sparkling White) நிறத்தில் மாறிவிடாது.