தலை குனிந்த ஹர்திக் பாண்டியா.. பழி வாங்கிய குஜராத் கோச்.. மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ்

2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் ;போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு தாவிய பின் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியின் வெற்றிகரமான செயல்பாட்டுக்கு தானே காரணம், கேப்டன் பாண்டியா இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக திட்டம் தீட்டி மும்பை அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது அணி வீரர்களுக்கு அவர் ஆலோசனை சொல்லிக் கொண்டே இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2024 ஐபிஎல் லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சாஹா 19, சுப்மன் கில் 31, சாய் சுதர்ஷன் 45, ஓமர்சாய் 17, ராகுல் டேவாட்டியா 22 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்தது. துவக்க வீரர் இஷான் கிஷன் டக் அவுட் ஆன நிலையில் ரோஹித் சர்மா போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு ஆடினார். அடுத்து வந்த நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இம்பாக்ட் வீரர் டேவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும் சேர்த்தனர். அவர்கள் களத்தில் இருந்தவரை போட்டி மும்பை வசமே இருந்தது.

அதன் பின் திலக் வர்மா 25 ரன்கள் எடுத்த போதும் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். 19வது ஓவரை வீசும் முன் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனிடம், குஜராத் அணி பயிற்சியாளர் நெஹ்ரா பல ஆலோசனைகளை கூறினார்.

இந்த நிலையில், 19வது ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்ஸ் அடித்த போதும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் பாண்டியா ஒரு பந்தை மட்டுமே சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து வெளியேறினார். கடைசி நான்கு பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் விக்கெட் வீழ்த்தினார் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ். கடைசி இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் தனது முதல் போட்டியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியுடன் 2024 ஐபிஎல் தொடரை துவங்கி உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *