Hardik Pandya: அவ்வளவுதான் போச்சா ரூ. 15 கோடி! ஐபிஎல் 2024 சீசன் பாண்ட்யா ஆடுவது சந்தேகம் தானா? காரணம் இதுதான்-hardik pandya unlikely to recover for afghanistan t20i series uncertain for ipl 2024 as well report
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமில்லாமல் அவரது பிட்னஸ், ஐபிஎல் 2024 தொடரில் பங்கேற்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 11 முதல் 17 வரை நடைபெறுகிறது. தற்போது சூர்ய குமார் யாதவும் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உருவாகியிருக்கும் நிலையில், இந்திய அணியின் கேப்டனுக்காக இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சமீப காலத்தில் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் என இருவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தேர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தொடருக்கு பின்னரும் ஹர்திக் பாண்ட்யா குணமடைவது குறித்து தெளிவான தகவல் தெரியாத நிலையில், ஐபிஎல் 2024 சீசனை கூட அவர் மிஸ் செய்ய நேரிடலாம் எனவும் கூறப்படுகிறது.
“ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து அப்டேட் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக இருக்கிறாரா என்பது மிகப் பெரிய கேள்விகுறியாகவே உள்ளது” என பிசிசிஐ வட்டார தகவல்களும் தெரிவித்துள்ளன.
ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாமல் போனால் கண்டிப்பாக ரோஹித் ஷர்மா தான் தேர்வாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கும். அதே சமயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன்சி வாய்ப்பு அளித்து பரிசோதனை முயற்சி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 வரை விளையாடினார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2022, 23 ஆகிய சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார் ஹர்திக் பாண்ட்யா. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா, விளையாடிய முதல் சீசனிலேயே கோப்பை வென்று கொடுத்தார். இரண்டாவது சீசனிலும் இறுதி போட்டி வரை அணியை அழைத்து சென்றார்.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஹர்திக் பாண்ட்யாவை ரூ. 15 கோடி கொடுத்து டிரேடிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வாங்கியது. அத்துடன் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை அந்த பதவியிலிருந்து தூக்கிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்தது. மும்பை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பாடு எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், காயம் காரணமாக அவர் விளையாடுவதே சந்தேகம் என்ற தகவல் மும்பை அணி நிர்வாகத்துக்கு பேரிடியாக அமைந்துள்ளது.