ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440-யே இந்த பைக் முன்னாடி வெறும் துசிதான்! முதல் முறையாக கேமிராவில் தென்பட்ட ஹீரோ பைக்!

இரண்டு வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) உடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) அதன் இந்திய வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து முதல் முறையாக ஹார்லி டேவிட்சனுக்காக தயாரிக்கப்பட்ட ஓர் சூப்பரான பைக் மாடலே எக்ஸ்440 (X440) ஆகும். இதுவே நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிளும்கூட.

இந்த மோட்டார்சைக்கிளுக்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 மாடலை தழுவிய ஓர் புதுமுக மோட்டார்சைக்கிளை தனக்காக தயாரித்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இது இந்திய இருசக்கர வாகன பிரியர்களை பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்து உள்ளது. ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு இணையான அம்சங்களுடன் மலிவு விலை பைக்கை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பதே அவர்களுடைய சந்தோஷத்திற்கான முக்கிய காரணம் ஆகும்.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த குஷியை இரட்டிப்பாக்கும் விதமான ஓர் தகவல் இணையத்தின் வாயிலாக வெளியாகி இருக்கின்றது. அதாவது ஹீரோ மோட்டோகார் இந்தியர்களுக்காக தயார் செய்து வரும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 அடிப்படையிலான மோட்டார்சைக்கிள் முதல் கேமிராவின் கண்களில் சிக்கி இருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட படங்களே இணையத்தில் தற்போது வெளி வந்திருக்கின்றது.

இந்த பைக் ஹீரோ மேவ்ரிக் எக்ஸ்440 எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த பைக் குறித்த எந்தவொரு முக்கிய தகவல்களையும் ஹீரோ வெளியுலகிற்கு பகிர்ந்துக் கொள்ளவில்லை. இந்த மேவ்ரிக் பைக் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

அதன் வருகையை ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் என்கிறது அரசல்-புரசலாக வெளி வந்துக் கொண்டிருக்கும் தகவல்கள். ஆனால், இதன் வருகை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை. சரி இப்போது ஸ்பை செய்யப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் வாயிலாக கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கலாம்.

ஸ்பை படத்தின் வாயிலாக ஹீரோவின் புதிய பைக்கில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதேபோல் பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்கு வலுசேர்க்கும் விதமாக முன் பக்கத்தில் குறுகிய நீளம் கொண்ட ஃபெண்டர் பொருத்தப்பட்டு இருப்பதும் இந்த ஸ்பை படம் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

மேலும், கவர்ச்சியான வட்ட வடிவ ஹெட்லைட் முகப்பு பகுதியில் இடம் பெற்றிருப்பதும், இது விற்பனைக்கு வரும்போது அந்த பைக்கில் இடம் பெறும் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர, அதிக கட்டுமஸ்தான ஃப்யூவல் டேங்க், ஃபாக்ஸ் ஏர் இன்டேக், வட்ட வடிவ கண்ணாடிகள் மற்றும் அப்ரைட் ஹேண்டில்-பார் ஆகியவையும் இந்த பைக்கில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இதேபோல், ஹீரோவின் இந்த புதுமுக பைக்கில் நடுத்தர டிஜிட்டல் கன்சோல், அலாய் வீல், டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய டூயல் டிஸ்க் பிரேக் ஆகியவையும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அதன் முற்றிலும் குறைவாகவே இருக்கும் என்பதை நாம் கட்டாயம் எதிர்பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *