விஜயகாந்த் மகன் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? பலரை வளர்த்து விட்ட கேப்டனின் மகனுக்கா இந்த நிலை?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் என்றாலே அவரின் எளிமையும், அதிரடி செயல்களும் தான் நினைவுக்கு வரும். திரையில் அவரால் முன்னேறியவர்கள் ஏராளம். பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், பல இளம் நடிகர்களுக்கும் ஒரு முகவரியை கொடுத்தவர்.
ஆனால் திரைத்துறையில் பலரை வளர்த்துவிட்ட விஜயகாந்தால் தனது சொந்த மகனை திரையில் ஜெயிக்க வைக்க முடியவில்லை. விஜயகாந்த் மகன் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் தற்போது அவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2015-ம் ஆண்டு சுரேந்தர் இயக்கத்தில் வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சண்முக பாண்டியன். மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் கிராமத்து இளைஞர் ஒருவர் துப்பறியும் நபராக மாறி குற்றங்களை தடுப்பது போல் இந்த் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் விஜயகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழன் என்று சொல் :
தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜயகாந்தும் தனது மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் இப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
மதுர வீரன் :
பிஜி முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டது. இந்த படத்தில் சண்முக பாண்டியன், மீனாட்சி, சமுத்திர கனி, மொட்ட ராஜேந்திர என பலரும் நடித்திருந்தனர். ஆனால் இந்த படமும் வந்த சுவடே தெரியாமல் போனது.
படைத்தலைவன் :
மதுர வீரன் படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கும் படம் படைத்தலைவன். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை வால்டர் படத்தின் இயக்குனர் அன்பு இயக்குகிறார். முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இளம் வயது விஜயகாந்தை நினைவுப்படுத்தும் விதமாக போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் காந்தாரா மாதிரியான வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.