‘பச்சை மிளகாய் தொக்கு’ செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா.? ரெசிபி இதோ.!

பச்சை மிளகாயை பெரும்பாலான உணவுகளில் சேர்த்து சமைப்பார்கள் அல்லது அதை வைத்து புளிமிளகாய் போன்ற ஊறுகாயாக செய்வார்கள். மேலும் சில உணவுகளை பச்சை மிளகாய் இல்லாமல் செய்வது கடினம்.

ஆனால் பச்சை மிளகாய் வைத்து தொக்கு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? அப்படி இல்லையென்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள். இதை நீங்கள் ஒரு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து மாத கணக்கில் சாப்பிடலாம்.

மேலும் இந்த பச்சை மிளகாய் தொக்கை வெள்ளை சாதம், தயிர் சாதம் கஞ்சி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் – 150 கிராம்

விலையில்லா சிகப்பு குண்டு மிளகாய் – 10 – 15

கடுகு – 1 ஸ்பூன்

பெருங்காய தூள் – 1 டீஸ்பூன்

புளி – 25 கிராம்

பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

கடலை எண்ணெய் – தேவைக்கேற்ப

கல் உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் எடுத்து வைத்துள்ள 25 கிராம் புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கரைத்து திக்கான கரைசலாக எடுத்து கொள்ளுங்கள்.

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய் நன்றாக வதங்கி வரும்பொழுது விதை எடுத்த சிகப்பு குண்டு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு குண்டு மிளகாய் இரண்டும் நன்றாக வதங்கி பொரிந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து கொள்ளுங்கள்.

இரண்டும் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மசிய அரைத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் உள்ள எண்ணெய்யுடன் மேலும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு போட்டு கொள்ளவும்.

கடுகு நன்றாக வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு கலந்து அதனுடன் பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

பிறகு அதில் சுவைக்கேற்ப கல் உப்பு, பொடித்த வெல்லம் மற்றும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.

இந்த மிளகாய் தொக்கு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை விடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருங்கள்.

தொக்கு எண்ணெய் பிரிந்து கடாயில் ஒட்டாமல் பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான ‘பச்சை மிளகாய் தொக்கு’ ரெடி..

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *