கர்நாடகா-வுக்கு வந்த பிரச்சனையை பாத்தீங்களா.. அப்போ தமிழ்நாட்டுக்கு..?!

ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாக, இஸ்ரேலுக்குச் சொந்தமான அல்லது இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் இயக்கப்படும் கப்பல்களைக் குறிவைத்துச் செங்கடலில் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
செங்கடலில் நடக்கும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா படைகள் ஈரான் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், பல நாடுகளின் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதால் உலகளவில் கப்பல் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் படைகளுக்கு மத்தியிலான தாக்குதல் மூலம் பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மாற்றுப் பாதையைத் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் பொருட்கள் வருவதில் தாமதத்தில் துவங்கி உற்பத்தி தொய்வு, கூடுதல் செலவு எனப் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் செங்கடலில் நடக்கும் பிரச்சனை காரணமாகக் கர்நாடகாவில் சில தொழில் துறைகளும், வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் வர்த்தகங்கள், உற்பத்தி கூட்டணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படும் எலக்ட்ரானிக் உரிதிபாகங்கள் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட எஃகு ஆகியவை செங்கடல் வழியாக அனுப்பப்பட்டு வந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக இந்த மூலப்பொருட்களை நம்பியிருக்கும் கர்நாடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு முக்கியமான தென்னிந்தியாவில் இருந்து பழங்களின் கூழ் ஏற்றுமதி செய்யப் போதுமான கண்டெய்னர்கள் கிடைக்காததால் இத்துறை வர்த்தகமும் முடங்கியுள்ளது. இத்தாலி நாட்டில் இருந்து வர வேண்டிய soft iron, ferro alloys பாதிக்கப்பட்டு உள்ளது, இதேபோல் இந்த இடைப்பட்ட காலத்தில் தைவான், சீனாவில் இருந்து ஸ்டீல் வாங்கப்பட்டு உள்ளது.
பல கர்நாடக நிறுவனங்கள் விமானத்தின் மூலம் பல பொருட்களை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுக்கான பெரும் பகுதி இறக்குமதி வழித்தடங்கள் தென்கிழக்கு நாடுகள் பக்கம் இருக்கும் காரணத்தால் செங்கடலில் பிரச்சனை தமிழ்நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, ஆனால் விலை அடிப்படையில் கட்டாயம் கணிசமான பாதிப்பு உள்ளது.