HBD Kapil Dev: இந்திய கிரிக்கெட்டில் தனியொரு இடம், ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த வரலாற்று நாயகன்!
கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்க்காதவர்கள் கூட அறிந்திருக்கும் கிரிக்கெட் வீரர் பெயர் என்றால் கபில் தேவ் என்பதை யோசிக்காமல் சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுக்காக முதல் முறையாக உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டனாக இருந்தது தான். யாரும் எதிர்பார்த்திராத இந்த சம்பவத்தை, அணியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தி செய்து காட்டியவர் கபில் தேவ்.
இந்திய மக்களிடையே கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமும், மோகமும் வர காரணமாக இருந்தது கபில் தேவ் உலகக் கோப்பை பெற்ற அந்த நிகழ்வு. இந்திய கிரிக்கெட்டையை கபில் தேவுக்கு முன், பின் என கூறும் அளவுக்கு அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வந்த வீரராக அவர் இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அறிமுகமான கபில் தேவ் டெஸ்ட், ஒரு நாள் என 1978 முதல் 1994 வரை என 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1999 முதல் 2000ஆவது ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். யார்க்கர் மன்னன், ஹரியானா புயல் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கபில் தேவ் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் எக்கசக்க சாதனைகளை புரிந்து ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனித்துவ இடத்தை பிடித்திருக்கும் கபில்தேவ் இன்று 65வது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவரைப்பற்றி அதிகம் தெரியாத விஷயங்களும், அவர் நிகழ்த்திய தனித்துவ சாதனைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
தனது 21வது வயதில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி, 1000 ரன்கள் எடுத்த கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரராக திகழ்ந்தார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் சதமடித்த வீரர் கபில் தேவ் தான். ஜூன் 18இல் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அசுரத்தனமாக பேட் செய்து இதை செய்தார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்து வரும் கபில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங்காக 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுவே ஒரு கேப்டனின் சிறந்த பவுலிங்காக இன்று வரையிலும் சாதனையில் இருந்து வருகிறது.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களும், 400 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டராக கபில் தேவ் தான் இன்று வரையிலும் இருந்து வருகிறார்.
1982 முதல் 1984 வரை இந்தியி கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கபில் தேவ், பத்ம ஸ்ரீ விருது, அர்ஜுனா விருது, ராஜிவ் காந்திி கேல் ரத்னா பெற்றிருப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டின் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகத்திலும், சிறந்த வீரர்கள் ஐசிசி கெளரவப்படுத்தும் ஹால் ஆஃப் பேம் ஆகியவற்றிலும் இடம்பிடித்துள்ளார்.
ஒரே காலண்டர் ஆண்டில் 600 ரன்களும், 70 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரராக கபில்தேவ் உள்ளார். 1979இல் அவர் இதை செய்துள்ளார். 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 ரன்கள், 74 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுமட்டுமல்ல, இன்னும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கபில் தேவ், தான் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏதாவதொரு சம்பவத்தை செய்து எதிரணியினரை ரணகளமாக்கும் வீரராகவே திகழ்ந்துள்ளார்.