அவர் உயிருடன் இருந்த போது ஏதும் செய்யவில்லை.. என் ஆட்டத்தை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.. ஆகாஷ் தீப்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் நாளிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக இந்திய இளம் வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.
ராஞ்சி நகரில் இருந்து 200 கிமீ தூரத்தில் உள்ள இந்திய அணிக்காக அறிமுகமான ஆகாஷ் தீப்பின் கிராமம். பீகாரில் பிறந்த ஆகாஷ் தீப், கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக டெல்லிக்கு வந்து பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவிற்கு மாற்றமடைந்தார். பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப், இந்திய தேர்வுக் குழுவின் பார்வையில் சிக்கியுள்ளார்.
அதன்பின் தென்னாப்பிரிக்கா ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக அறிமுகமான அவருக்கு ராகுல் டிராவிட் நீண்ட அறிமுகத்துடன் டெஸ்ட் கேப் வழங்க, அதனை அவரின் அம்மா ஆனந்த கண்ணீருடன் பார்த்தார்.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களிலேயே தனது பவுலிங் திறமையை நிரூபித்துவிட்டார் ஆகாஷ் தீப். சிறப்பாக பந்துவீசிய அவர், இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை ஒற்றை பவுலராக முடித்து கட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து ஆகாஷ் தீப் பேசுகையில், எனது வாழ்க்கையில் இழப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அடைவதற்கு இலக்கு என்று ஒன்று உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை குழந்தைகளுக்கும், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது தான் இலக்காக இருக்கும். இந்திய அணியின் டெஸ்ட் கேப்பை வாங்கிய போது, மிகவும் எமோஷனலான தருணமாக அமைந்தது. ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய பொறுப்பும் இருந்தது. எனது ஆட்டத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
எனது தந்தைக்கு நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம். அவர் உயிருடன் இருந்த போது நான் எதையும் செய்யவில்லை. அதனால் இதனை அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்திய அணி நிர்வாகம் தரப்பில் எனது திட்டத்தை எளிமையாக வைக்க அறிவுறுத்தினார்கள். இதுவரை என்ன செய்தாயோ, அதனை செய் என்று கூறினார்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
ஏனென்றால் இங்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிமுக வீரர்களுக்கு குழப்பம் ஏற்படும். அதனால் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை செய்யுமாறு கூறினார்கள். அதுதான் நான் விக்கெட் வீழ்த்துவதற்கு காரணமாக அமைந்தது. சிராஜ் ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி அடிக்கப்பட்ட போது எனக்குள் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. ஏனென்றால் அடுத்தடுத்த ஓவர்களில் அதிக ரன்கள் சென்றால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும். அதனால் கவனமாக இருந்தேன்.
நான் புதிய பந்தில் பவுலிங் செய்த போது, இரு திசைகளிலும் என்னை அட்டாக் செய்ய முயற்சித்தார். அதனால் அவரின் உடலுக்கு நெருக்கமான லைனில் பவுலிங் செய்தேன். அப்போது கிராலியால் எதுவும் செய்ய முடியவில்லை. அதேபோல் பந்தும் 3 ஓவர்களுக்கு மேல் ஸ்விங்காகவில்லை. அதனால் க்ரீஸின் ஒரு ஓரத்தில் இருந்து பந்துவீசிய போது, விக்கெட்டை வீழ்த்த முடிந்ததாக தெரிவித்துள்ளார்.