”கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை அவருக்கு…” – காமத்துக்கு மரியாதை
ஓ ர் இளைஞர், ‘நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை’ என்றாலோ, ‘இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை’ என்றாலோ, அவருடைய வார்த்தைகளுக்குப் பெற்றோரும், உறவினர்களும் கட்டாயம் செவிகொடுக்க வேண்டும் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதற்கான காரணத்தை ஒரு கேஸ் ஹிஸ்டரி மூலம் விளக்குகிறார்.
”அந்த இளைஞருக்கு 25 வயது. என்னைச் சந்திக்க வந்திருந்தார். ‘வீட்டில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால், என்னுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது டாக்டர்’ என்றார் வருத்தமாக. அவருக்கு கிட்டத்தட்ட ஆணுறுப்பே இல்லை. சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் மெல்லிய கயிறுபோல இருந்தது. தவிர, விந்துப்பையும் இல்லை. அவருக்கு ஹார்மோன் பரிசோதனைகள் எடுத்துப் பார்த்தேன். நான் நினைத்ததுபோலவே ஹார்மோன் அளவுகள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. என்னுடைய மருத்துவ அனுபவத்தில், அந்த இளைஞருடைய பிரச்னையை சரி செய்ய முடியும். ஆனால், அதற்கு சில வருடங்கள் ஆகும். அதை அவரிடம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
முதலில் ஹார்மோன் சிகிச்சை கொடுத்தேன். லேசாக தாடி, மீசை வளர ஆரம்பித்தது. அதன்பிறகு, Follicle-stimulating hormone (FSH) கொடுத்தேன். விந்துப்பைகளே இல்லாத இடத்தில், லேசான புடைப்புபோல தெரிய ஆரம்பித்தது. ஹார்மோன் சிகிச்சைகள் அவருடைய உடம்பில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன என்பது தெரிந்ததும், இரண்டு அல்லது மூன்று வருடங்களில் உங்களால் எல்லா ஆண்களையும் போல வாழ முடியும் என்று கூறினேன். அவர் மகிழ்ச்சியுடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.