|

‘அவர் சகோதரர் போன்றவர்’.. விஜயகாந்த் இறுதி மரியாதையில் குறையேதும் கூடாது.. ஸ்டாலின் போட்ட உத்தரவு

தேமுதிகவின் நிறுவன தலைவரும், தமிழ் திரை உலகில் கோலோச்சியவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை காலமானார்.

இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், “சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதையை செய்திருக்கிறோம்” என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

விஜயகாந்த்தின் ஆரம்ப கட்ட வாழ்க்கை எப்படி போராட்டங்களுடன் தொடங்கியதோ, அதேபோல இறுதி கட்டத்திலும் கடுமையான போராட்டங்களுடன் விடைபெற்றிருக்கிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் மோதல், கை கொடுக்காத 2016 மக்கள் நலக்கூட்டணி, தொடர்ச்சியான வாக்கு வங்கி சரிவு என அரசியல் களம் அவரை கொங்சம் கொஞ்சமாக கைவிட்டது. அதே நேரத்தில், உடல் நலமும் இவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை இவருக்கு தேவைப்பட்டது.

பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. நாளுக்கு நாள் உடல் பலவீனமடைந்துக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கையில் கடந்த மாதம் 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து சலசலப்பு எழுந்தது.

ஆனால் அதையெல்லாம் முறியடித்து மீண்டு வந்தது, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து நெகட்டிவ்வான அறிக்கை வெளியானது.

அதாவது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அதிலிருந்து அவரை மீட்க மருத்துவர்கள் போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிக்கை வெளியானது. இதைகேட்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கதறி அழுதனர். விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினி, கமல் என திரையுலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது உடல் தீவுத்திடலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு விஜயகாந்த்தின் இறுதி சடங்குக்கு செய்துள்ள மரியாதை குறித்து விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒரு மாற்றுக் கட்சியை சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று கூறியுள்ளது.

மேலும், “கோயம்பேட்டில் இட நெரிசலை கருத்தில் கொண்டு, குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தீவுத்திடலில் விஜயகாந்த்தின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார். உடலை எடுத்து செல்ல வாகன வசதியை முதலமைச்சர் ஏற்பாடு செய்தார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *