இவரெல்லாம் மனுஷனே இல்லை.. மெஸ்ஸியால் கூட தொட முடியாத கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மெகா சாதனைகள்

கால்பந்து ஜாம்பவான் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தன் 39வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் கால்பந்தில் செய்த சாதனைகளுக்கு அளவே இல்லை. தனது சம கால போட்டியாளரான ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியால் கூட தொட முடியாத சில சாதனைகளை அவர் செய்து இருக்கிறார். அதில் முக்கியமான பத்து சாதனைகள் குறித்து இங்கே பார்ப்போம்.

உலகிலேயே சீனியர் வீரர்கள் ஆடும் போட்டிகளில் 800 கோல்கள் அடித்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். கடந்த நவம்பர் 2022இல் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்துள்ளார். அவர் 128 சர்வதேச கோல்கள் அடித்து இருக்கிறார். செப்டம்பர் 2021ஆம் ஆண்டு அலி டேய்-இன் 109 சர்வதேச கோல்கள் சாதனையை முறியடித்து இதை செய்து இருந்தார்.

கால்பந்து லீக் தொடர்களில் முக்கியமான ஒன்றான சாம்பியன்ஸ் லீக் தொடரை அதிக முறை வென்ற வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ரொனால்டோ. அவர் ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற அணிகளில் இடம் பெற்று இருந்தார்.

அதே போல ஒரே சாம்பியன் லீக் சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் ரொனால்டோ. 2013 – 14 சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக 17 கோல்கள் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் ரொனால்டோ. இதே சாம்பியன் லீக் தொடரில் ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் மட்டுமின்றி அடுத்த இரண்டு இடங்களிலும் ரொனால்டோவே இடம் பெற்றுள்ளார். ஒரு முறை 16 கோல்களும், மற்றொரு முறை 15 கோல்களும் அடித்து இருந்தார்.

மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ தான் வைத்துள்ளார். அவர் இந்த தொடரில் மட்டும் மொத்தம் 140 கோல்கள் அடித்துள்ளார். சாம்பியன் லீக் தொடர்களில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது. அவர் மொத்தம் 183 சாம்பியன் லீக் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.

ஐந்து வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதே போல, சர்வதேச போட்டிகளில் பத்து முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ரொனால்டோ. அதே போல, தொடர்ந்து 11 சர்வதேச தொடர்களில் ஒரு கோல் ஆவது அடித்த ஒரே வீரர் ரொனால்டோ மட்டுமே.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *