ரோஹித் சர்மாவுக்கு ஆப்பு வைக்கப் போவதே இவர்தான்.. கேப்டன் பதவிக்கு குறி வைத்த பும்ரா

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை பிடிக்க ஹர்திக் பாண்டியா முயன்ற நிலையில், அவரை துணை கேப்டன் ஆக்கி தனது கேப்டன் பதவியை 2024 டி20 உலகக்கோப்பை வரை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் ரோஹித் சர்மா. ஆனால், டெஸ்ட் அணியில் அவரால் நீண்ட காலம் கேப்டன் பதவியில் இருக்க முடியாது. அதைப் பறிக்க இந்திய பவுலர் ஒருவர் காத்துக் கொண்டு இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இருக்கிறார். அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தையும் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சை திட்டமிடும் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட இரண்டாவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியில் பும்ராவின் பங்கு அதிகம். அவர் அந்தப் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தியது மட்டுமல்ல. பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என போட்டிக்கு முன்பே கூறி, போட்டியின் போதும் அவர்களுக்கு ஆலோசனை கூறியபடி இருந்தார். அந்த வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றியில் துணை கேப்டனாக பும்ராவின் பங்கு அதிகம்.

மறுபுறம் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார். இந்திய மண்ணில் மட்டுமே இதுவரை ரோஹித் சர்மா அதிக டெஸ்ட் போட்டி ரன்களை குவித்து இருக்கிறார். ஆனால். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்த ஆண்டு இன்னும் பத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

ரோஹித் சர்மாவின் பேட்டிங் இதே போல மோசமாகவே இருந்தால் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற அழுத்தத்துக்கு பிசிசிஐ ஆளாகும். புஜாரா, ரஹானே போன்ற மூத்த வீரர்களின் பேட்டிங் திறன் குறைந்ததால் அவர்களை நீக்கி இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா, தானும் அதே நிலைக்கு ஆளாகக் கூடும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் ரோஹித் சர்மா அதில் ரன் குவித்தால் மட்டுமே கேப்டன் பதவியை தக்க வைக்க முடியும். இல்லையெனில் டெஸ்ட் அணி கேப்டன் பதவிக்காக காத்திருக்கும் பும்ராவிடம் அதை இழக்க நேரிடும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *