6 மாசத்துக்கு ஒருமுறை அப்டேட்ல இருக்கும் அவரிடம் இங்கிலாந்து எச்சரிகையா இருக்கனும்.. பனேசர் அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக வந்தது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறது. அதனால் இம்முறை இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடும் என்று நம்புவதால் இத்தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மொபைல் ஆப்:
இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்நிலையில் மொபைல் ஆப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை எதிரணிகளின் பலத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் ரவிச்சந்திரன் அஸ்வின் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.
எனவே அஷ்வினை மிகுந்த கவனத்துடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பல்வேறு விதமான பந்துகளை வீசுவதற்கு தேவையான மன நிலைமையை மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து தன்னை முன்னேற்றி வருகிறார். சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் கூட அதிக விக்கெட்டுகளை எல்லா நேரத்திலும் எடுப்பது எளிதானதல்ல”
“சொந்த மண்ணில் அவருக்கு சாதகமான மைதானங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர் அதில் விக்கெட்டுகளை எடுப்பதற்கு தகுந்தார் போல் தன்னை தொடர்ந்து மாற்றியமைத்துக் கொண்டு வருவதை நீங்கள் பார்க்க முடியும். அந்த வகையில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆப் போல அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டு வருகிறார். அதைத்தான் தன்னுடைய கேரியர் முழுவதிலும் அவர் செய்து வருகிறார்”
“பவுலிங் என்று வரும் போது நான் அஸ்வினின் மாணவன். அவருடைய பவுலிங் பற்றி நான் புதியவற்றை தொடர்ந்து கற்று வருவதாக உணர்கிறேன். அது தான் அஸ்வினுடைய சொத்து அவர் அபாரமான பவுலர்” என்று கூறினார். அந்த வகையில் இதுவரை 490 விக்கெட்களை எடுத்துள்ள அஸ்வின் இந்த இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.