கம்பீரமாக உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர்! தமிழ்நாடு + உத்தரப் பிரதேசம்.. சொன்னதை கவனிச்சீங்களா!
டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
தனது உரையில், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இதில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் குறித்து அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு தொழில் வழித்தடம்: மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், இந்தியாவில் இரு இடங்களில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்டமைப்பு ரூ.20 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமைப்பு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதலீடுகள்: இத்திட்டத்தின்படி, பொதுத் துறை மற்றும் தனியாரைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடிக்கு மேல் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான படைக்கலத் தொழிற்சாலை நிறுவனமானது ரூ.2,305 கோடியை முதலீடு செய்துள்ளது. பெல் நிறுவனம் ரூ.140.50 கோடி, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (பிஇஎம்எல்) ரூ.40 கோடி, பாரத் டைனமிக் நிறுவனம் (பிடிஎல்) ரூ.150 கோடி, மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனம் (எம்டிஎல்) ரூ.150 கோடி முதலீடு செய்துள்ளன.
இவைதவிர, டிவிஎஸ் நிறுவனம் ரூ.50 கோடி, டாடா பாட்டர்ன்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடி, ஏரோ ஸ்பேஸ் தொழில்துறை மேம்பாட்டு சங்கம் (ஏஐடிஏடி) ரூ.163 கோடி, ஆல்பா டிசைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி, ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயர்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி முதலீடு செய்துள்ளன. லட்சுமி மில்ஸ் நிறுவனம் (எல்எம்டபிள்யூ) ரூ.150 கோடி முதலீடு செய்யவுள்ளது.