ஜெய்ஸ்வாலை திட்டியது இவர்தான்.. இரண்டு டபுள் செஞ்சுரி அடிக்க காரணமே அந்த சம்பவம் தான்
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ரன் குவித்திருந்தார். இரண்டு இரட்டை சதம் உட்பட 5 போட்டிகளில் ஆடி 712 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஒருவர் திட்டியதாகவும், அதன் பின்னரே அவர தன் தவறுகளை திருத்திக் கொண்டு அதிக ரன் குவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என புகழப்படுபவர் சுனில் கவாஸ்கர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் தவறு செய்தால் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். அவர் இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதல் டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வாலை சந்தித்து இருக்கிறார்.
அப்போது அதற்கு முந்தைய டெஸ்ட் தொடரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது 50 ரன்களை கடந்த பின் ஜெய்ஸ்வால் தன் விக்கெட்டை மோசமான ஷாட் ஆடி பறிகொடுத்ததாக திட்டி இருக்கிறார். அது போல எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நாமே வாய்ப்பை கொடுக்கக் கூடாது என அப்போது கவாஸ்கர், ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாத போதும் இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை தானே பறிகொடுக்காமல் கவனமாக ஆடியதால் இரண்டு முறை இரட்டை சதம் அடித்தார். மேலும் மூன்று அரைசதங்களையும் அடித்தார்.
அதன் மூலம் கவாஸ்கர் மட்டுமே செய்த மைல்கல் சாதனை ஒன்றை ஜெய்ஸ்வால் எட்டினார். இந்திய வீரர்களிலேயே ஒரே டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கும் மேல் குவித்த ஒரே வீரர் கவாஸ்கர் மட்டுமே. அந்த மைல்கல் சாதனையை எட்டினார் ஜெய்ஸ்வால். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் 712 ரன்கள் குவித்தார்.