பிச்சு உதறப்போகும் கனமழை.. தமிழகம் முழுக்க மெகா சம்பவம் காத்திருக்கு.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி என மாநிலத்தின் அநேக இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிச. மாதம் நல்ல மழை பெய்தது. சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் இந்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு மாநிலத்தில் பெரிதாக எந்தவொரு மழையும் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே வரும் நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மழை எங்கே: இதன் காரணமாக இன்று ஜன. 6ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல ஜன. 7ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: ஜன.8 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜன. 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜன.10 மற்றும் 11 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.