ஹலோ பில் கேட்ஸ், எப்படி இருக்கீங்க..! மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு தடாலடி உயர்வு..!!
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 5 வருடத்தில் எப்போதும் இல்லாத வகையில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. ஒரு காலத்தில் பில் கேட்ஸ் தான் எப்போதும் முதல் இடத்தில் இருப்பார், ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது.
சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தால் பில் கேட்ஸ் சொத்து மதிப்பு வளர்ச்சி பாதையில் இருந்தது. இதனால் டாப் 10 பட்டியலுக்குள்ளேயே இருந்தார். இந்த நிலையில் டெக் துறை பில்லியனர்கள் பட்டியலில் பில் கேட்ஸ்-ஐ தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற முக்கியமான சமுக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா-வின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், தற்போது பில் கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை வெள்ளிக்கிழமை (FEB 2) தடாலடியாக 22 சதவீதம் வரையில் உயர்ந்தது மூலம் இவருடைய சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
மெட்டா பங்குகளின் உயர்வின் மூலம் அதன் சந்தை மதிப்பு கிட்டதட்ட 200 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதனால் மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து அவருடைய மொத்த சொத்து மதிப்பு 170 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலர் உடன் 5வது இடத்தில் உள்ளார். இதுவே டெக் பில்லியனர்கள் பட்டியலில் பார்த்தால் முதல் இடத்தில் அமேசான் ஜெப் பெசோஸ் 197 பில்லியன் டாலர் உடன் உள்ளா, 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்க், 3வது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளனர்.
உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும ஜெப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் மத்தியிலான போட்டி அதிகரித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் 205 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் வேளையில், ஜெப் பெசோஸ் மத்தியிலான வித்தியாசம் வெறும் 8 பில்லியன் டாலர் மட்டுமே.
மெட்டா நிர்வாகம் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஈவுத்தொகையை மார்ச் மாதத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வேளையில் மார்க் ஜுக்கர்பெர்க் சுமார் 174 மில்லியன் டாலர் பணத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஜூக்கர்பெர்க் கட்டுப்பாட்டில் மெட்டா நிறுவனத்தின் 350 மில்லியன் கிளாஸ் ஏ மற்றும் கிளாஸ் பி பங்குகள் வைத்துள்ளார்.