நண்பனுக்கு செய்யும் உதவி.. கடைசி ஐபிஎல் சீசனில் முக்கிய மாற்றத்தை செய்த தோனி.. இதுதான் தல!
சிறுவயது நண்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பிரைம் ஸ்போர்ட்ஸ் நிறுவன ஸ்டிக்கருடன் கூடிய பேட்டில் பயிற்சி மேற்கொண்டு வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஜனவரி மாதமே பேட்டிங் பயிற்சி தொடங்கிவிட்டார். ஏற்கனவே முழு ஃபிட்னஸை எட்டியுள்ள நிலையில், மீண்டும் தனது ஹேர்ஸ்டைலுக்கு திரும்பியுள்ளார். தோனியின் இந்த புதிய தோற்றம், 2004ல் தோனி அறிமுகமான போது இருந்த தோற்றத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஞ்சியில் பேட்டிங் தோனி பயிற்சியில் ஈடுபட்ட வந்த போது, அவரது பேட்டில் இருந்த ஸ்டிக்கர் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது. பேட்டில் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற ஸ்டிக்கரை கொண்டு தோனி விளையாடி வருகிறார். இது தோனியின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அவரின் நண்பர் பரம்ஜித் சிங்கின் விளையாட்டு நிறுவனத்தின் பெயராகும்.
முதல்முறையாக பரம்ஜித் சிங் மூலமாக தோனிக்கு பேட் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் கூட பரம்ஜித் சிங்கின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்திருக்கும். விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் பரம்ஜித் சிங், தோனிக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்க தொடர்ந்து முயற்சிகளை செய்வார்.
தற்போது பரம்ஜித் சிங் நிறுவனத்தின் பேட்டையே தோனி பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி ஐபிஎல் தொடரில் களமிறங்கும் தோனி, தனது நண்பனுக்கு நன்றி கூறும் வகையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் ஸ்டிக்கருடன் கொண்டு பேட்டை பயன்படுத்துவார் என்று தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது தோனி பல்வேறு பிராண்ட்களை கொண்டு பேட்டை களத்தில் பயன்படுத்தினார். BAS, எஸ்எஸ், ஸ்பார்டன் என்று தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பேட் ஸ்பான்சர் செய்த அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் பல்வேறு பேட்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.